search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய மந்திரி சபை"

    மோடியின் புதிய மந்திரி சபையில் உள்ள மந்திரிகளில் 22 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான புதிய மந்திரி சபையில் மொத்தம் 58 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் கல்வித் தகுதி, சொத்து விவரம் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ள வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வியாழக்கிழமை பதவியேற்ற மந்திரிகளில் 51 பேர் கோடீஸ்வரர்கள். 22 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 47 மந்திரிகள் பட்டதாரிகள். ஒரு மந்திரி டிப்ளமோ படித்துள்ளார். 8 மந்திரிகள் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்துள்ளனர். 

    16வது மக்களவையை ஒப்பிடுகையில், இந்த மக்களவையில் இடம்பெற்றுள்ள மந்திரிகளில் குற்றவழக்குகள் கொண்ட மந்திரிகளின் எண்ணிக்கை 8 சதவீதம் அதிகம் ஆகும். தீவிர குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள மந்திரிகளின் எண்ணிக்கை 12 சதவீதம் உயர்ந்துள்ளது. 

    சராசரியாக ஒவ்வொரு மந்திரிக்கும் ரூ.14.72 கோடி சொத்து உள்ளது. உள்துறை மந்திரி அமித் ஷா, ரெயில்வே  மந்திரி பியூஷ் கோயல், ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோருக்கு ரூ.40 கோடிக்கும் அதிகமாக சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    கைலாஷ் சவுத்ரி, ராமேஸ்வர் தேலி உள்ளிட்ட 5 மந்திரிகளுக்கு மட்டுமே ஒரு கோடி ரூபாய்க்கு குறைவாக சொத்து உள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த மந்திரி பிரதாப் சந்திர சாரங்கியிடம் வெறும் ரூ.13 லட்சம் மதிப்புள்ள சொத்து மட்டுமே உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    மத்திய மந்திரிசபை பதவியேற்பு விழாவிற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்திருக்க வேண்டும் என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு திரும்பி வந்துள்ளேன்.

    ஒரு மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்தி மற்றும் முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டார்கள். முதல்-அமைச்சர் என்ற முறையில் நானும் கலந்து கொண்டேன்.


    தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்திருக்க வேண்டும். அப்படி அவர்கள் செய்யவில்லை. இது பா.ஜனதாவின் பிரிவும், பாரபட்சமான மனப்பான்மையைக் காட்டுகிறது. பா.ஜனதா தேர்தலில் வெற்றி பெற்றவுடன் நாங்கள் எல்லோரையும் சமமாக பாவிப்போம், எல்லாம் மாநிலத்தையும் பாரபட்சமின்றி நடத்துவோம், அனைத்து மாநிலங்கள் வளர்ச்சிக்கும் பாடுபடுவோம் என்று சொன்னார்கள்.

    பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் கட்சி பா.ஜனதாவின் அமைச்சரவையில் இடம் பெறவில்லை.

    பா.ஜனதா சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. ஆளுங்கட்சியாக இருப்பவர்கள் எதிர்க்கட்சிகளை அரவணைத்து செல்வது தான் அரசியல் நாகரீகம்.

    பா.ஜ.க.வின் அமைச்சரவையில் யார்- யார் இடம் பெற வேண்டியது என்று முடிவு செய்ய வேண்டியது பிரதமர் மோடி தான். அதைப் பற்றி நான் எதுவும் கருத்து சொல்ல முடியாது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பல காரணங்கள் உண்டு. இது சம்பந்தமாக நாங்கள் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.

    மேலும் பா.ஜனதா மதவாதத்தை முன்வைத்தும், பாகிஸ்தான் பிரச்சனையை முன்வைத்தும், புல்வாமா தாக்குதலை முன்வைத்தும், மத பெயரால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது.

    காங்கிரஸ் கட்சியான நாங்கள் எல்லா மதத்தையும் அரவணைத்து செல்பவர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலத்திட்டங்கள் என்னென்ன செய்வோம் என்று தேர்தல் பிரசாரம் செய்தோம். எங்கள் பிரசாரம் எடுபடவில்லை.

    மத பெயரால் பிரசாரம் செய்த பா.ஜனதாவின் தேர்தல் பிரசாரம் எடுபட்டது. பா.ஜனதா சொன்ன நதி நீர் இணைப்பு திட்டத்தை வரவேற்கிறேன். நதிநீர் இணைப்பு நல்லதுதான் காவிரி இணைப்பு தேவை தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் போது உரிய நேரத்தில் அ.தி.மு.க.வையும் மந்திரி சபையில் சேர்ப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று இல.கணேசன் தெரிவித்தார்.
    சென்னை:

    மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் அளிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் யாருக்கும் மந்திரி பதவி வழங்கப்படவில்லை.

    இந்தநிலையில் டெல்லியில் மோடி பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்று சென்னை திரும்பிய தமிழக பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசனிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

    முறைப்படி மத்திய மந்திரி சபை பதவி ஏற்றுள்ளது. இது முழுமையான மந்திரி சபை அல்ல. மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் போது உரிய நேரத்தில் அ.தி.மு.க.வையும் மந்திரி சபையில் சேர்ப்பது பற்றி பரிசீலிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள மத்திய மந்திரிகளின் இலாகாக்களின் முழு விவரத்தை பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று புதிய அமைச்சரவை பதவி ஏற்றது.

    இந்த அமைச்சரவையில் மோடியையும் சேர்த்து மொத்தம் 58 பேர் மத்திய மந்திரிகளாக உள்ளனர்.

    புதிய அமைச்சரவையில் உத்தரபிரதேச மாநிலத்துக்கு அதிகபட்சமாக 9 மந்திரிகள் பதவி கிடைத்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் இருந்து 8 பேர் மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றுள்ளனர்.

    மத்திய பிரதேசம், பீகார் மாநிலங்களில் இருந்து தலா 5 பேர் மத்திய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் 4 பேர், ராஜஸ்தான், குஜராத், அரியானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் தலா 3 பேர், மேற்குவங்காளம், பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்தவர்கள் தலா 2 பேர் மந்திரிசபையில் இடம் பெற்றுள்ளனர்.

    கோவா, தெலுங்கானா, ஒடிசா, சத்தீஸ்கர், அருணாசலபிரதேசம், அசாம், உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம், காஷ்மீர், டெல்லியை சேர்ந்தவர்கள் தலா ஒருவர் இடம் பிடித்துள்ளனர்.

    மத்திய மந்திரிகளுக்கு எந்தெந்த இலாகாக்களை ஒதுக்குவது என்பது சம்பந்தமாக இன்று காலை முதல் பிரதமர் மோடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் அவர் இது தொடர்பாக கருத்துகளை கேட்டு அறிந்தார்.

    இதையடுத்து இன்று மதியம் புதிய மந்திரிகளுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த முறை பிரதமருக்கு அடுத்த நிலையில் 2-வது இடத்தில் உள்துறை மந்திரியாக இருந்த ராஜ்நாத்சிங் பாதுகாப்பு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    பா.ஜனதா தலைவர் அமித்ஷா இந்த தடவை முதல் முறையாக மத்திய மந்திரியாகி உள்ளார். அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை இலாகா வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மந்திரியாக இருந்த நிர்மலா சீதாராமன் நிதி மந்திரி ஆக்கப்பட்டுள்ளார்.

    தமிழகத்தை சேர்ந்த ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை மந்திரியாகி உள்ளார். கேரளாவை சேர்ந்த முரளிதரன் வெளியுறவுத்துறை இணை மந்திரியாகி உள்ளார்.

    மந்திரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகாக்கள் விவரம் வருமாறு:-



    பிரதமர் மோடி- அணுசக்தி, விண்வெளி, பொதுநலம், பென்‌ஷன், கொள்கை முடிவுகள் மற்றும் இதுவரை ஒதுக்கப்படாத அமைச்சரவை இலாகாக்கள்.

    1. ராஜ்நாத் சிங்- பாதுகாப்பு

    2. அமித்ஷா-உள்துறை

    3. நிதின் கட்காரி-சாலை போக்குவத்து, நெடுஞ்சாலைத்துறை, சிறுகுறு நடுத்தர தொழில்.

    4. சதானந்த கவுடா- ரசாயனம் மற்றும் உரம்

    5. நிர்மலா சீதாராமன்-நிதி மற்றும் கம்பெனி விவகாரம்

    6. ராம்விலாஸ் பஸ்வான்- உணவு, பொது விநியோகம், நுகர்வோர் விவகாரம்.

    7. நரேந்திர சிங் தோமர்- வேளாண், விவசாயம் நலன், ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ்.

    8. ரவிசங்கர் பிரசாத்- சட்டம், தகவல் தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம்.

    9. ஹர்சிம்ரத் கவுர் பாதல்- உணவு பதப்படுத்தும் தொழில்.

    10. தாவர் சந்த் கெலாட்- சமூக நீதி.

    11. ஜெய்சங்கர்- வெளியுறவுத்துறை.

    12. ரமேஷ் பொக்ரியால்- மனிதவள மேம்பாடு

    13. அர்ஜூன் முண்டா- பழங்குடியினர் நலம்.

    14. ஸ்மிருதி இரானி- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, டெக்ஸ்டைல்.

    15. ஹர்‌ஷவர்தன்- சுகாதாரம், அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் புவி அறிவியல்.

    16. பிரகாஷ் ஜவடேகர்- சுற்றுச்சூழல், வனம், தகவல் ஒளிபரப்பு.

    17. பியூஸ் கோயல்- ரெயில்வே, வர்த்தகம், தொழில்.

    18. தர்மேந்திர பிரதான்- பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் ஸ்டீல்.

    19. முக்தார் அப்பாஸ் நக்வி- சிறுபான்மையினர் நலம்

    20. பிரகலாத் ஜோஷி- பாராளுமன்ற விவகாரம், நிலக்கரி மற்றும் சுரங்கம்.

    21. மகேந்திரநாத் பாண்டே- திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் நலம்.

    22. அரவிந்த் சாவந்த்- கனரக தொழில்.

    23. கிரிராஜ் சிங்- வன விலங்கு, பால், மீனவர் நலம்.

    24. கஜேந்திர சிங் செகாவத்- நீர் பாசனம்.

    (தனி பொறுப்பு)

    1. சந்தோஷ்குமார் கங்குவார்- தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு.

    2. ராவ் இந்திரஜித் சிங்- புள்ளியியல், அமலாக்கம் மற்றும் திட்டம்

    3. ஸ்ரீபாதயசோ நாயக்- பாதுகாப்பு, ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா, ஓமியோபதி

    4. டாக்டர் ஜிதேந்திர சிங்- வடகிழக்கு மேம்பாடு, பிரதமர் அலுவலகம், பொதுநலன், பென்‌ஷன், அணுசக்தி, விண்வெளி.

    5. கிரண் ரிஜிஜு- இளைஞர் நலம், விளையாட்டு, சிறு பான்மையினர் நலம்.

    6. பிரகலாத் சிங் படேல்- கலாச்சாரம், சுற்றுலா.

    7. ராஜ்குமார் சிங்- மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, திறன் மேம்பாடு.

    8. ஹர்தீப் சிங் பூரி- வீட்டு வசதி, விமானம், வர்த்தகம், தொழில்.

    9. மன்சுக் மாண்டவியா- கப்பல், ரசாயனம், உரம்.

    1. பஹன் சிங் குலாத்தே- ஸ்டீல்

    2. அஸ்வினி குமார் சவுபே- சுகாதாரம், குடும்ப நலம்.

    3. அர்ஜூன் ராம் மேக்வால்- பாராளுமன்ற விவகாரம், கனரக தொழில்.

    4. வி.கே.சிங்- சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை.

    5. கிரி‌ஷன் பால் குர்ஜார்- சமூக நீதி.

    6. தன்வீ ராசாகேப் தடா ராவ்- உணவு, பொது விநியோகம்.

    7. கி‌ஷன் ரெட்டி- உள்துறை.

    8. புருசோத்தம் ரூபாலா- வேளாண், விவசாயிகள் நலன்.

    9. ராம்தாஸ் அத்வாலே- சமூக நீதி.

    10. சாத்வி நிரஞ்சன் ஜோதி- ஊரக மேம்பாடு.

    11. பாபுல் சுப்ரியோ- சுற்றுச் சுழல், வனம், தட்பவெட்ப நிலை.

    12. சஞ்சீவ் பல்யான்- வன விலங்கு, பால், மீனவர்.

    13. சஞ்சய் சம்ராவ் தோட்ரே- மனிதவள மேம்பாடு, தகவல் தொடர்பு, எலக்ட்ரானிக், தகவல் தொழில்நுட்பம்.

    14. அனுராக் தாக்குர்- நிதி, கம்பெனி விவகாரம்.

    15. சுரேஷ் அங்கடி-  ரெயில்வே.

    16. நித்யானந்த் ராய்- உள்துறை.

    17. ரத்தன்லால் கட்டாரியா- நீர்பாசனம், சமூக நீதி.

    18. முரளீதரன்- வெளியுறவுத் துறை, பாராளுமன்ற விவகாரம்.

    19. ரேணுகா சிங் சருடா- பழங்குடியினர் நலம்.

    20. சோம் பர்காஷ்- வர்த்தகம், தொழில்.

    21. ராமேஷ்வர் டெலி- உணவு பதப்படுத்தும் தொழில்.

    22. பிரதாப் சந்திர சாரங்கி- சிறு, குறு, நடுத்தர தொழில், வனவிலங்கு, பால், மீனவர் நலன்.

    23. கைலாஷ் சவுத்ரி- வேளாண், விவசாயிகள் நலன்.

    24. தேவஸ்ரீ சவுத்ரி- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு.
    பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இரண்டாவது முறையாக நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் பல்வேறு எம்.பி.க்கள் அமைச்சரவையில் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

    பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகாக்கள் விவரம் பின்வருமாறு:-



    பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு உள்துறை
    ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத்துறை
    தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
    பாஜகவிற்கு சற்று பின்னடைவாக உள்ள மேற்கு வங்காளம், ஒடிசா, கேரளா ஆகிய 3 மாநிலங்களுக்கு கூடுதலாக மத்திய மந்திரி பதவிகளை வழங்க பிரதமர் மோடி தீர்மானித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா மட்டும் தனியாக 303 இடங்களில் வென்றிருக்கிறது.

    மேற்குவங்காளம், ஒடிசா போன்ற மாநிலங்களில் பா.ஜனதா கடந்த காலங்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. ஆனால் இப்போது அங்கு ஆழமாக காலூன்றி இருக்கிறது.

    மேற்குவங்காளத்தில் 18 எம்.பி. தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. அதேபோல ஒடிசாவிலும் 8 இடங்களில் வென்றுள்ளது. அங்கு இதற்கு முன்பு 2-வது இடத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் அந்த இரு மாநிலங்களிலும் இன்னும் ஆழமாக காலூன்றி வரும்காலத்தில் மாநில ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பது பா.ஜனதாவின் திட்டமாக உள்ளது.



    அதேபோல கேரள மாநிலத்திலும் பா.ஜனதா வலுவாக காலூன்ற முடியும் என்று நம்புகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு அங்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. ஆனாலும் பல தொகுதிகளில் கணிசமான ஓட்டுக்களை பெற்றுள்ளது.

    எனவே இன்னும் அதிக கவனம் செலுத்தினால் கேரளாவிலும் ஒரு காலத்தில் மிகப்பெரிய கட்சியாக வளர முடியும் என்று பா.ஜனதா நம்புகிறது.

    இதன் காரணமாக மேற்கு வங்காளம், ஒடிசா, கேரளா ஆகிய 3 மாநிலங்களுக்கு இந்த தடவை கூடுதல் மத்திய மந்திரிகளை வழங்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். தற்போது மேற்குவங்காளத்தை சேர்ந்த பாபுல்சுப்ரியோ, எஸ்.எஸ். அலுவாலியா ஆகியோர் மத்திய மந்திரிகளாக உள்ளனர். இப்போது 18 இடங்களை கைப்பற்றி இருப்பதால் அங்கு கூடுதலாக மந்திரி பதவி வழங்கப்பட இருக்கிறது.

    2021-ல் மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. கூடுதல் மத்திய மந்திரிகளை வழங்கி மாநிலத்தில் அதிக கவனம் செலுத்தினால் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்று பா.ஜனதா கருதுகிறது.

    ஒடிசாவில் இந்த தடவை பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் சேர்ந்து நடந்தது. இதில் பாராளுமன்ற தேர்தலில் 8 இடங்களை கைப்பற்றி மாநிலத்தின் 2-வது பெரிய சக்தி என்பதை பா.ஜனதா நிரூபித்துள்ளது.

    இனிவரும் காலங்களில் சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியும் என்று கருதுகிறது. இதனால் அங்கும் கூடுதல் மந்திரிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

    கேரளாவில் கடந்த 2014 தேர்தலிலும் ஒரு இடமும் பா.ஜனதாவுக்கு கிடைக்கவில்லை. ஆனால் கேரளாவை சேர்ந்த அல்போன்ஸ் கன்னன் தானத்தை ராஜஸ்தான் மேல்சபை எம்.பி. ஆக்கி மந்திரி பதவி வழங்கினார். இன்னும் அவருடைய எம்.பி. பதவி காலம் உள்ளது. எனவே அவருக்கு மீண்டும் மந்திரி பதவி வழங்கப்பட இருக்கிறது.

    இவர் தவிர இன்னும் ஒருவரை மந்திரியாக்கலாம் என்ற திட்டம் பா.ஜனதாவுக்கு உள்ளது. கேரள மாநில பா.ஜனதா தலைவர் முரளிதரன் மகாராஷ்டிர மாநில மேல்சபை எம்.பி.யாக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மந்திரி பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லை என்றால் வேறு ஒரு நபரை மந்திரியாக்கி பின்னர் ஏதாவது ஒரு மாநிலத்தில் மேல்சபை எம்.பி. ஆக்கும் திட்டமும் உள்ளது.

    2021-ல் கேரளாவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மத்திய மந்திரி பதவியை அதிகமாக வழங்கி கூடுதல் கவனம் செலுத்தினால் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சில இடங்களை கைப்பற்ற முடியும் என்று கருதுகிறார்கள்.

    கடந்த மந்திரிசபையில் சிவசேனாவுக்கு ஒரு இடம் வழங்கப்பட்டிருந்தது. இப்போது 2 மந்திரி பதவி வழங்க திட்டமிட்டுள்ளனர். அதேபோல ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 2 மந்திரி பதவி வழங்க உள்ளனர்.

    தற்போது உள்ள மந்திரி சபையில் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மந்திரியாக உள்ளார். ஆனால் இந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. அவருக்கு பதிலாக அவரது மகன் ஜிராக் பஸ்வானுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று ராம்விலாஸ் பஸ்வான் கேட்கிறார்.

    ஆனால் ராம்விலாஸ் பஸ்வானே மந்திரி பதவியில் தொடர வேண்டும் என்று பா.ஜனதா விரும்புகிறது. அசாம் மாநிலத்தில் விரைவில் 2 எம்.பி. இடங்கள் காலியாக உள்ளன. அதில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு ஒரு எம்.பி. பதவியை ராம்விலாஸ் பஸ்வானுக்கு கொடுத்து அதன் மூலம் அவரை மந்திரியாக தொடர வைக்க பா.ஜனதா திட்டமிட்டிருக்கிறது.
    பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 2 பேருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.
    சென்னை:

    மோடி தலைமையிலான புதிய மத்திய மந்திரி சபை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பதவி ஏற்க உள்ளது.

    ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பல வெளிநாட்டுத் தலைவர்கள் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு வர இருப்பதால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே புதிய அமைச்சரவையில் யார்- யாரை மத்திய மந்திரிகளாக சேர்த்துக் கொள்ளலாம் என்று மோடி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். பாரதிய ஜனதா கட்சி தனிப்பட்ட முறையில் 303 இடங்களைக் கைப்பற்றி இருப்பதால் மத்திய மந்திரி சபையில் முக்கியமான, பெரும்பாலான மந்திரிகள் பா.ஜனதாவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

    என்றாலும் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியினரையும் மத்திய மந்திரி சபையில் இடம்பெற செய்ய மோடி முடிவு செய்துள்ளார். எனவே சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க., அகாலி தளம், லோக் ஜனசக்தி, அப்னா தளம் ஆகிய கட்சிகள் மத்திய மந்திரி சபையில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

    பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் சிவசேனா 18 எம்.பி.க்களை வைத்துள்ளது. கடந்த தடவை 3 மந்திரி பதவி பெற்ற சிவசேனா இந்த தடவை 4 மந்திரி பதவிகளை கேட்கிறது. 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2 மந்திரி பதவி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

    ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 எம்.பி.க்களும், சிரோமணி அகாலி தளம் கட்சிக்கு 2 எம்.பி.க்களும், அப்னா தளம் கட்சிக்கு 2 எம்.பி.க்களும் உள்ளனர். இந்த மூன்று கட்சிகளுக்கும் தலா ஒரு மந்திரி பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆல் ஜார்க்கண்ட் ஸ்டூடன்ட்ஸ் யூனியன், ராஜஸ்தானில் லோக் தந்திரிக் கட்சி, நாகலாந்தில் தேசிய ஜனநாயக முன்னேற்ற முன்னணி, மிசோரமில் மிசோ தேசிய முன்னணி, தேசிய மக்கள் கட்சி ஆகியவை தலா 1 இடத்தில் வென்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு மத்திய மந்திரி சபையில் இடம் கிடைக்குமா? என்று தெரியவில்லை.

    இந்த நிலையில் தமிழ் நாட்டில் 38 இடங்களில் அ.தி.மு.க. மட்டும் தேனி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. எனவே அ.தி.மு.க.வுக்கு மத்திய மந்திரி சபையில் ஒரு இடம் கொடுக்க மோடி முடிவு செய்துள்ளார். அந்த ஒருவர் யார் என்பதை தெரிவிக்கும்படி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு பா.ஜனதா மேலிட தலைவர்கள் கூறியுள்ளனர்.


    இந்த நிலையில் அ.தி.மு.க. தரப்பில் 2 மத்திய மந்திரி பதவிகளை தருமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த இரு மந்திரி பதவிகளில் ஒரு பதவி, தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத் குமாருக்கு கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இலாகாவை பெற காய்களை நகர்த்தி வருகிறார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான வைத்திலிங்கம் மத்திய மந்திரி பதவி பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். டெல்லி மேல்- சபையில் எம்.பி. ஆக இருக்கும் வைத்திலிங்கத்தை மத்திய மந்திரியாக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தி வருகிறார்.

    பாராளுமன்ற மக்களவையில் அ.தி.மு.க.வுக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ள போதிலும் மேல்-சபையான மாநிலங்கள் அவையில் தற்போது அ.தி.மு.க.வுக்கு 13 எம்.பி.க்கள் உள்ளனர். வருகிற ஜூலை மாதம் மேல்-சபை தேர்தல் முடிந்த பிறகு அ.தி.மு.க. மேல்-சபை எம்.பி.க்களின் எண்ணிக்கை 12 ஆக இருக்கும்.

    டெல்லி மேல்-சபையில் பாரதிய ஜனதா தனி மெஜாரிட்டியுடன் இல்லை. எனவே மேல்-சபையில் அ.தி.மு.க.வின் தயவு பாரதிய ஜனதாவுக்கு தேவை என்ற நிலை உள்ளது. மேல்- சபையில் 12 எம்.பி.க்களை வைத்திருப்பதால் அ.தி.மு.க.வுக்கு இரண்டு மத்திய மந்திரிகள் தருவதுதான் நியாயமானதாக இருக்கும் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

    இந்த வாதத்தை பாரதிய ஜனதா ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அ.தி.மு.க.வுக்கு இரு மந்திரி பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில் வைத்திலிங்கம், ரவீந்திரநாத்குமார் இருவரும் மந்திரி ஆவார்கள். அவர்கள் இருவருக்கும் ராஜாங்க இலாகா கொடுக்கப்படலாம்.

    இதற்கிடையே டாக்டர் அன்புமணியையும் மேல்- சபை எம்.பி. என்ற அந்தஸ்துடன் மத்திய மந்திரியாக்க முயற்சிகள் நடந்து வருகிறது. மீண்டும் அவருக்கு சுகாதாரத் துறையை பெற காய்கள் நகர்த்தப்பட்டுள்ளன. ஆனால் பா.ம.க.வின் விருப்பத்தை பாரதிய ஜனதா நிறைவேற்றுமா? என்பது இன்னமும் உறுதியாகவில்லை.
    காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதல் குறித்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. #PMModi #CRPF #PulwamaAttack
    புதுடெல்லி:

    காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதையடுத்து இன்று டெல்லியில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த மந்திரி சபையை கூட்டினார்.

    அதன்படி காலையில் மோடி தலைமையில் மந்திரிசபை அவசர ஆலோசனை நடத்த கூடியது. இதில் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


    நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. காஷ்மீரில் உள்ள நிலைமை குறித்தும் அங்கு எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் தற்கொலை தாக்குதலுக்கு எப்படிப்பட்ட பதிலடி கொடுப்பது என்றும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

    காஷ்மீர் தாக்குதலையடுத்து பா.ஜனதா தலைவர்களின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்பட்டன. #PMModi #CRPF #PulwamaAttack 
    விஜயா வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய மூன்று வங்கிகளை ஒன்றாக இணைக்கும் அரசின் முடிவுக்கு மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்தது. #DenaBankmerger #VijayaBankmerger #BoBmerger
    புதுடெல்லி:

    விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றைப் பரோடா வங்கியுடன் இணைப்பதை எதிர்த்து வங்கிப் பணியாளர்களின் 9 சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பு சார்பில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம் நடைபெற்றது. எனினும், இந்த இணைப்பில் மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது.

    இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றைப் பரோடா வங்கியுடன் இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.



    இந்த இணைப்பின் மூலம் இவ்வங்கிகளில் பணியாற்றுபவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பாரத ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வரிசையில் பரோடா வங்கியை மூன்றாவது இடத்தில் முன்னிறுத்துவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். #DenaBankmerger #VijayaBankmerger #BoBmerger 
    அனைத்து ஏழைகளுக்கும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. #LPG #UjjwalaLPGSCheme
    புதுடெல்லி:

    இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்க “பிரதமர் உஜ்வலா யோஜனா” எனும் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

    இந்த திட்டத்துக்காக பணக்காரர்கள், சமையல் எரிவாயுக்கு பெறும் மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று சுமார் 5 கோடி பேர் மானியத்தை விட்டுக் கொடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் மலைவாழ்-பழங்குடி இன மக்களுக்கும் இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டது.


    இதற்கிடையே இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தை மேலும் விரிவுபடுத்த பிரதமர் மோடி முடிவு செய்தார். அவரது உத்தரவின் பேரில் யார்-யாருக்கு இந்த திட்டத்தை கொண்டு செல்வது என்று ஆய்வு செய்யப்பட்டது.

    அந்த ஆய்வில் இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. இதுபற்றி டெல்லியில் நேற்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இறுதியில் அனைத்து ஏழைகளுக்கும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏழை-எளியவர்கள் பயன் பெறுவார்கள்.

    மத்திய மந்திரிசபை கூட்டத்தில், பீகார் மாநிலம் பாட்னாவில் கங்கை நதியின் குறுக்கே ரூ.2926 கோடி செலவில் புதிய பாலம் கட்டவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. #LPG #UjjwalaLPGSCheme
    மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் இணை மந்திரியாக இருக்கும் ராஷ்டரிய லோக் சமதா கட்சி தலைவர் உபேந்திரா குஷ்வாஹா ராஜினாமா செய்கிறார். #UpendraKhuswaha #NDAministry
    புதுடெல்லி:

    பீகார் மாநிலத்தில் செல்வாக்குபெற்ற ராஷ்டரிய லோக் சமதா கட்சியின் தலைவர்  உபேந்திரா குஷ்வாஹா. மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் மனிதவள மேம்பாட்டு துறை இணை மந்திரியாக இவர் பதவி வகிக்கிறார்.

    குஷ்வாஹாவையும் சேர்த்து, பாராளுமன்ற மக்களவையில் இந்த கட்சிக்கு மூன்று உறுப்பினர்கள் உள்ளனர்.

    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் தொடர்பாக பா.ஜ.க.வுடன் உபேந்திரா குஷ்வாஹா நடத்திய பேச்சுவார்த்தையில் ராஷ்டரிய லோக் சமதா கட்சிக்கு அவர் எதிர்பார்த்த அளவுக்கு இடங்கள் ஒதுக்கப்படவில்லை என தெரியவருகிறது.

    இந்நிலையில், தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ள உபேந்திரா குஷ்வாஹா, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகப்போவதாக நம்பகமான தகவல் வெளியாகியுள்ளது.

    விரைவில் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் அலுவலகத்துக்கு குஷ்வாஹா அனுப்பி வைப்பார் அல்லது, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கடிதத்தை அளிப்பார் என எதிர்பார்க்கபடுகிறது. #UpendraKhuswaha #NDAministry

    மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1200 கோடி நிதி ஒப்புதலை மத்திய அமைச்சரவை இன்னும் ஒரு சில நாட்களில் அளிக்க இருக்கிறது. #AIIMS #AIIMSinMadurai #Thoppur
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பதவியில் இருந்தபோது 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதே ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி தமிழ்நாட்டில் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    2015-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் தலைமையில் தமிழகம் வந்த உயர்மட்டக் குழுவினர், குறிப்பிட்ட 5 இடங்களுக்கும் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

    ஆனால், அதன்பிறகு தொடர் நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் மத்திய அரசு இருந்துவந்ததால், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக கோர்ட்டில் பொது நல வழக்கும் தொடரப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 18-ந் தேதி டெல்லியில் மத்திய குழு கூடி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்கியது.

    அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தது. இந்த நிலையில், கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவின நிதி குழு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு நிதி வழங்க ஒப்புதல் வழங்கியது. அதன் அடிப்படையில், அடுத்த சில நாட்களில் மத்திய அமைச்சரவை கூடி ரூ.1,200 கோடி நிதியளிக்க ஒப்புதல் அளிக்க இருக்கிறது.  #AIIMS #AIIMSinMadurai #Thoppur
    ×